கிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016 06:39
கிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆம் திகதி மாலிந்துறையில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை கந்தளாய் சிவன்கோவில் பாடசாலை (தற்போது விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயம் (அப்போது கிண்ணியா மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் இயங்கியது) ஆகியவற்றில் கற்றார்.
இடைநிலைக் கல்விக்காக கிண்ணியா மத்திய கல்லூரியில் சேர்ந்து அங்கு க.பொ.த. (சாதாரண தரம்) வரை கற்றார். கொழும்பு சாஹிராக் கல்லூரியில் உயர்கல்வி கற்று அங்கிருந்து கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்திற்குத் தெரிவானார். 1979 இல் சட்டமாணியாக பட்டம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதல் சட்டமாணியாகவும், திருகோணமலை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் சட்டமாணியாகவும் இவர் திகழ்கின்றார்.
1981.03.16 இல் சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்து கொண்ட இவர் மறுநாளே கிண்ணியா சுற்றுலா நீதிமன்றத்தில் தனது சட்ட தொழில் பயணத்தை ஆரம்பித்தார். திருகோணமலை, கந்தளாய், மூதூர் நீதிமன்றங்களில் இவர் ஆஜராகி வருகின்றார். தற்போது திருகோணமலை மாவட்டத்தில் எல்லா வகை நீதிமன்றங்களிலும் தோன்றும் சிரேஷ;டமானவராக இவரே இருக்கின்றார்.
சுமார் 35 வருட சட்டத்துறை அனுபவம் கொண்ட இவர் மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் இதுவரை 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் ஆஜராகி பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
ஒருவர் கைது செய்யப்பட்ட பின் பிணை வழங்கும் நடைமுறையே முன்னர் இருந்து வந்தது. பின்னர் கைது செய்யப்படுவதற்கு முன்னரே முன்பிணை வழங்கும் சட்டம் அமுலுக்கு வந்தது. இந்தக் காலப் பகுதியில் ஒரு வழக்கில் தோன்றி ஒருவருக்கு முன்பிணை பெற்றுக்கொடுத்தார். திருகோணமலை மாவட்டத்தில் முன்பிணை பெற்றுக் கொடுத்த முதலாமவராகவும் இவரே திகழ்கின்றார்.
சட்டத்துறை சம்பந்தமான பல்வேறு தேடல்கள் உள்ள இவர் உயர் நீதிமன்ற வழக்குகள் பலவற்றின் தீர்ப்புச்சட்டங்களை தன்னகத்தே தொகுத்து வைத்துள்ளார். தனது வெற்றிகளுக்கு இது போன்ற தேடல்கள் மிகுந்த பங்களிப்பைச் செய்துள்ளதாக இவர் குறிப்பிடுகின்றார். இளம் சட்டத்தரணிகள் பலர் இவரிடம் இருந்த பல்வேறு விடயங்களைக் கற்று வருகின்றனர்.
தனது சட்டத்தொழிலுக்கு மேலதிகமாக பொதுப்பணிகள் பலவற்றிலும் இவர் ஈடுபட்டுள்ளார். அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணியின் தேசிய உப தலைவராக இவர் பணியாற்றியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தற்போது செயற்பட்டு வருகின்றார். தொடர்ந்து 4 ஆவது தடவையாக இதன் தலைவராக இருக்கின்றார். அதேபோல கிண்ணியா மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீது அவர்களை அடிக்கடி இவர் நினைவு கூர்கின்றார். பாடசாலைக் காலத்தில் தனக்கெதிராக உருவாக்கப்பட்ட பிரச்சினையொன்றைத் தீர்த்து வைத்து தடங்களில்லாமல் கல்வி கற்க அவர் உதவி செய்ததாகவும், கொழும்பு சாஹிராவில் கல்வி கற்ற காலத்தில் புத்தகங்கள் வாங்கித் தந்து படிக்கத் தூண்டியதாகவும் குறிப்பிடுகின்றார்.
நகைச்சுவையாகப் பழகும் இவரோடு பயணஞ் செய்தால் பயண அலுப்பே தெரியாது. இற்றைக்கு சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அப்பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முஸ்லிம்களது பாதுகாப்பு சம்பந்தமான பிரகடன நிகழ்வுக்கு திருகோணமலை மாவட்டத்திலிருந்து இவரோடு நானும் இன்னும் சிலரும் சென்றோம். அந்தப் பயண அனுபவம் என்றும் மறக்க முடியாததாகும்.
உம்முசுரைக் இவரது வாழ்க்கைத் துணைவியாவார். பயாஸ் அஹ்மத், பஸீல் அஹ்மத், பஸ்மி அஹ்மத், சட்டத்தரணி சித்தி சௌமியா, நிஹால் அஹ்மத் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
கிண்ணியா
கிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்

கிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...
03 மே 2017 Hits:8797
Read moreகிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்

கிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலாம் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...
25 ஒக் 2016 Hits:12778
Read moreகிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்
கிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆ...
27 செப் 2016 Hits:11714
Read moreசிறப்புக் கட்டுரை
